Wednesday, February 17, 2016

இசைத்துறையில் தமிழ்




இசைத்துறையில்  தமிழ்

                ஒரு மொழியின் பயன்பாட்டுத் திறத்திற்கு அம்மொழியின் தகவமைப்பு (தக்க முறையில் அமையும் திறம்) அளவுகோலாக அமையும். உலக மொழிகளுள் பல, தக அமையும் திறமற்றுக் காணப்படும் நிலையில் உள்ளன.  செம்மொழியாம் தமிழ்மொழி இலக்கணம், இலக்கியம், நிகண்டு, அகராதி, தத்துவம், தருக்கம், சமய விளக்கம், ஆகியவற்றில் திட்பமும், நுட்பமும் செறிந்தும் பல்வேறு துறைகளில் தன்னேரில்லாத் தகைமை பெற்றுத் திகழ்கின்றது. இருப்பினும் முத்தமிழின் நடுவண் தமிழான இசைத்தமிழின் வரலாற்றுத் தொன்மையும்  கருத்து செறிவும் சிறப்புற பெற்றிருப்பினும் அதன் அறிமுகமும், தெளிவுகளும் மக்களுக்கு மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், ஒளிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் குறிப்பிட்ட குழுவினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டும் இருந்த நிலை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.  இங்கே இசைத்தமிழ் துறையில் பயன்பாட்டுத் தமிழ் எவ்வாறு தாக்கம் பெற்றுள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

                தமிழிசை தோன்றிய காலம், தமிழ்மொழி தோன்றிய காலமே!. தமிழ் மக்களின் எண்ணம், சொல், செயல், வாழ்வு அனைத்தும் இசை கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன. தமிழர் வாழ்வின் பெரும்பங்கை இசையே ஏற்றுள்ளது. குழந்தைப் பருவத்தில் தாலாட்டு, திருமணத்தில் நலுங்குப்பாட்டு, கருப்பக் காலத்தில் வளைக்காப்புப் பாட்டு, இறப்பின் போது ஒப்பாரிப் பாட்டு என்று தமிழரின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை இடம் பெற்றுள்ளதும், இன்றும் தமிழர்கள் இசையோடு; வாழ்கின்றனர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.  ஷேக்ஸ்பியர்இசைக்கு கட்டுப்படாதவன்  எத்தகைய கொடுஞ்செயலையும் செய்யக்கூடியவன் என்று கூறுகின்றார்.  இதனால் தான், இசையால் வசமாகாத இதயம் இவ்வையகத்தில் இல்லை என்று தமிழிசை சான்றோர்கள் கூறுகின்றனர்.
                தமிழிசைப் பாடல்களில் காணும் இசையின் அடிப்படை இலக்கணம் கூறுவது இசைத்தமிழ். தமிழ் மொழியிலே அமைந்த இசைப்பாடல்கள் தமிழிசையாகும்.  இரண்டும் ஒன்றோடு ஒன்று இரண்டறக் கலந்தவை.
                இசைத்தமிழின் தொன்மை சிறப்புமிக்கது. தொல்காப்பியம் ஓர் இயற்றமிழ் நூலாக எழுந்தும், இசைத்தமிழ், நாடகத்தமிழ் இலக்கண கூறுகள் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே கிடைக்கின்றன. இசைத்தமிழ் நூலினை இசையோடு சிவணிய நரம்பின் மறை என்ற கூறுவார் தொல்காப்பியர்.  தொல்காப்பியர் காலத்திற்கு சில நூற்றாண்டுகள் முன்னரே பல வண்ணப்பாடல்கள், கலிப்பாடல்கள,; பரிபாடல், பண்ணத்தி, தேவபாணி, தரவு, தாழிசைகள், வெண்பா, ஆசிரியம் முதலிய இசைப்பாடல்கள் சிறப்புற வழக்கத்தில் இருந்திருக்கின்றன. கடைச்சங்க நூல்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய இவற்றுள் தமிழர் இசை பற்றிய இலக்கணக் குறிப்புகளும், பண்கள் வளர்ச்சியும்,  மாறு முதல் பண்ணுதலால் கிடைக்கும் புதிய பண் அமைப்புகளும், யாழின் வகைகள், உறுப்புகள் போன்ற செய்திகளும் நிரம்பக் கிடைக்கின்றன.
                சிலப்பதிகாரம் என்னும் முத்தமிழ் காப்பியம் பண்டையத் தமிழ் இசையின் கருவூலம். சிலப்பதிகாரம் கூறும் இசைத்தமிழ் இலக்கணம் வியக்கத்தக்கதாகும். ஏழிசை, ஈராறு இராசிகள், பன்னிரு பாலை, நாற்பெரும் பண்கள், 103 பண்கள், ஏழு பாலைகள், பாலை பண்ணும் முறைகள், குரல் திரிபு, வலமுறை திரிபு, இடமுறை திரிபு, அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல், இசை புணரா குறிநிலை, இணை, கிளை, பகை, நட்பு, வட்டபாலையில் நரம்புகள் நிற்கும் முறை, இணைக்கிரமம், செம்பாலையின் இலக்கணம், பண்ணுப் பெயர்த்தல், மாறு முதல் பண்ணல் அலகு, ஆளத்தி நெறி முறைகள், யாழின் வகைகள், யாழ் வாசிக்கும் முறை, யாழிலிட்ட பண்கள், தாளவியல், ஏழ் வகை தூக்குகள் தண்ணுமை, இசை குழலோன், யாழாசிரியர் இவர்கள் அமைதி, பண்ணிலக்கணம், பாடல்கள் அல்லது உருக்களின் இலக்கணம் காணக்கிடக்கின்றன.
                சேந்தன் திவாகரமும், பிங்கல நிகண்டும் பல இசைத்தமிழ் குறிப்புகளைத் தருகின்றன. 
                தமிழரின் இசையெழுச்சிக் காலம் கி.பி 7-9-ஆம் நூற்றாண்டுகள் எனக் குறிப்பிடலாம். இறைவனையே இசைமயமாக் கண்டவர்கள் தமிழ் மக்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் எனக் குறிப்பிட்டனர்.  அதனால் தான் இறைவனைப் பண்ணிசையால் பாடிப் பரவினர்.  இம்முறையில் பண்ணோடு கூடிய பக்திப் பாடல்கள் பைந்தமிழில் பல உள்ளன. அவற்றுள் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முதலியவை குறிப்பிடத்தக்கன.  இந்நூல்களில் உள்ள பக்திப் பாடல்கள் தமிழ் தேனோடு இசைத் தேனையும் கலந்து சுவைத்துத் தருவனவாகும். சுpலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய ஆசிரியர்கள் காலம் கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டுகள். அரும்பதவுரையாசிரியர்(11-ஆம் நூற்றாண்டு),அடியார்க்கு நல்லார் (12-ஆம் நூற்றாண்டு), இவ்விரு நூற்களின் துணைகொண்டு, சிலப்பதிகாரத்தின் இசை எத்துணை விரிவானது, ஆழமானது, உயர்வானது என்பதை நன்கு உணரலாம்.
                சேக்கிழாரின் பெரியபுராணம் இசை ஆய்வினுக்கு பயனுறும் நுட்பச் செய்திகளைத் தருவதைக் காணலாம்.  15-16-ஆம் நூற்றாண்டுகளின் திருவிளையாடற்புராணம், அருணகிரியார் இயற்றிய திருப்புகழ்ப்பாடல்களை பக்தி இசையிலக்கியங்களின் சிறப்பாகக் கருதலாம். லயத்தை அடிப்படையாக வைத்தது திருப்புகழ் பாடல்கள் என்றால் மிகையாகாது.
                சிற்றிலக்கிய காலமான 15-19-ஆம் நூற்றாண்டுகளின் பிள்ளைத்தமிழ், கலம்பகம், பள்ளு, குறவஞ்சி போன்ற பாடல்கள் அக்கால கலைகளையும், சமுதாய நிலை போன்ற பல கருத்துக்களையும் எடுத்துக்காட்டுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் அளிக்கும் எளிமையான இசைப்பாடல்கள் இசைநயம் பொருந்தியவையாகவும், கருத்துச் செறிவும், பல பண்களில் இயற்கையான இசையுடன் கூடி அமைந்திருக்கக் காண்கிறோம்.
தமிழ்நாட்டுச் சமயங்கள் வளர்ந்த இசை பெருமைக்குரியது. சமண சமய இசை, இஸலாமியர் வளர்த்த தமிழ் இசை(மஸ்தான் சாஹிப் பாடல்கள்) கிறிஸ்தவ சமயம் வளர்த்த தமிழர் இசை (ஆபிரகாம் பண்டிதர், வேத நாயக சாஸ்திரியார், வீரமாமுனிவர், வேதநாயகம் பிள்ளை) போற்றுதற்குரியவைகள். இவையாவும் தமிழிசையின் வளத்தினைப் பெருக்கியுள்ளன. 20-21-ஆம் நூற்றாண்டுகளில், அதாவது, தற்காலத்தில் தமிழரிடையே வழங்கும் இசைகளுள் கர்நாடக இசையும் ஒன்றாகும். கர்நாடக இசையானது பண்பட்ட இசை, திருந்திய இசை என்று கூறலாம். தென்னாட்டு கர்நாடக இசையானது மிகப் பழமையானதும், தொன்மைச் சிறப்பு வாய்ந்ததுமாகும். இக்கர்நாடக இசையின் வரலாற்றினை நடுநிலையான உள்ளத்தோடும் நெறியுடனும் ஆராய்ந்து நோக்கினால் அது பல ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலே தோன்றி பண்டைய தமிழர்களால் அரும்பாடுபட்டு வளர்த்த ஓர் இசை முறையின் பிற்காலத்துப் பரிணாம வளர்ச்சியென்று நன்கு விளங்கும். இவ்விசை தாளக் கட்டுப்பாடு, பண் அமைப்பு, கருத்துச் சிறப்பு கொண்ட பாடல்களைக் கொண்டது. கர்நாடக இசையின் ஆதி தமிழிசை மும்மூர்த்திகள் என்று வழங்கப்படும் மாரிமுத்தா பிள்ளை, முத்துத் தாண்டவர், அருணாச்சலக் கவிராயர் இனிய தமிழி;ல் அருமையான இசையில் கர்நாடக இசைக்குப் பொருத்தமான, பக்திச்சுவை மிக்க கீர்த்தனைகளை இயற்றினார்கள். பிற்காலத்தில் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் எனும் சங்கீத மும்மூர்த்திகள் முறையே தெலுங்கு, வடமொழிகளில் கீர்த்தனைகளை பல நூற்றுக்கணக்கான இராகங்களில் நல்லதொரு இசை இலக்கண அடிப்படையில் இயற்றினார்கள்.
                இச்சூழலில் தமிழுக்கென்று இசையில்லை, இசை வரலாறு இல்லை என்று பலகாலம் நிலவிய மாயை இருளை நீக்கித் தமிழிசை வரலாற்றையும் கனமான தமிழிசையையும் அறிந்து கொள்ள முதல் வித்தினை விதைத்தவர் தமிழ்த்தாத்தா எனும் மகோபாத்திரியாயர் .வே.சா அவர்கள். இருளில் புதைந்து கிடந்த இசைத்தமிழ்ப் புதையலை 1892-இல் .வே.சா சிலப்பதிகார பதிப்பின் மூலம் வெளிக்கொணர்ந்தார். இந்நூல் இன்றேல் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் இல்லை என்றே கூறலாம். தமிழ் வரலாற்றில் முதன் முதலில் தமிழ் இசையே உலகில் ஆதியிசைகளிலெல்லாம் முதன்மையானது என்றும் ஏழு சுரங்கள், பன்னிரண்டு சுர நிலைகளை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இசையின் இலக்கணத்தையே உலகின் பிற இசை வடிவங்களும் பின்பற்றத் தொடங்கின என்றும், எனினும் அவை முதலில் தோற்றம் பெற்ற இடம் தமிழ் மண்ணே என்றும் கருணாமிர்தசாகரம் விரிந்துரைக்கிறது.
                1917-இல்  வெளிவந்த கருணாமிர்த சாகரத்தை தொடர்ந்து 1947-இல் பதிவான யாழ்நூல், இவ்விரண்டின் மூலமாக தமிழிசையின் அருமை பெருமைகளை தமிழுலகும், வெளியுலகும் அறிய தொடங்கின.  இந்நூல்களைத் தொடர்ந்து பாணர் கைவழி, சிலப்பதிகார இசை நுணுக்கம், பழந்தமிழிசை, யாழும் இசையும், பழந்தமிழிலக்கியத்தில் இசையியல் முதலான நூல்கள் இசைத்தமிழ் தொடர்பான ஆய்வுகளாக வெளிவந்தன. இசைத்தமிழ் வரலாற்றில் முதல் முதலாக இசைக்கான கலைக்களஞ்சியம் 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வீ..கா. சுந்தரம் அவர்களால் 4 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இதன் தொடர்புடையதாக வெளிவந்துள்ள திரு.நா.மம்மது அவர்களின் தமிழிசை பேரகராதி (சொற்களஞ்சியம்)  இசைத்தமிழ் ஆய்விற்கு பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ளது.
                நாட்டுப்புறப் பாடல்கள் அனைத்திலுமே ஒரு முறையான இசை வடிவம் உள்ளது. பரவலாக நாட்டுப்புறப் பாடல்களில் பண்ணமைப்பு இல்லையென்றொரு கருத்து உண்டு. ஆனால் இப்பாடல்களிலும் இசையமைதி விளங்குகின்றன.
                தமிழ்நாட்டின் இசை வரலாற்றில் 1931-ஆம் ஆண்டு முதல் பேசும் திரைப்படம் வெளிவந்ததும், திரை இசை எனும் புதிய இசை வகை ஒன்று தோன்றியது. தற்போது நாட்டுப்புற இசை,  சொல்லிசை, நாடக இசை, திரை இசை, மெல்லிசை என விரிவடைந்துள்ளன. புதிய இசையமைப்பாளர்களின் வரவால் தமிழ்த் திரை இசையும், சமயப் பாடல்களின் போக்கும் புதிய பரிணாமத்தை அடைந்தது வருகின்றன. 21-ஆம் நூற்றாண்டில் தமிழிசை, மக்கள் இசையாக தமிழகத்தில் வேரூன்றி விட்டது. இருப்பினும் தற்கால தமிழ் இசையமைப்பு முறைகள் செவ்விசை வடிவத்தினையும், மேற்கத்திய இசை வடிவங்களையும், வட இந்திய இசையின் வடிவங்களையும், அயல்நாட்டு இசையின் வடிவத்தினையும் தன்னுள் கலந்து, முற்றிலும் ஒரு புதிய பரிணாமத்தை பெற்றுவருகின்றன.
                இன்றைய சூழலில், தமிழ் அறிவு என்பது இயற்றமிழுடன் சுருங்கி நிற்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இன்றும் தமிழகத்தில் இசைத்தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பதுடன், அதன் பெருமையும் உணரப்படவில்லை என்பதும் ஒரு கசப்பான உண்மையே. காலப்போக்கில் இசைத்தமிழ் தன் செல்வாக்கை இழந்து விடா நிலை அமைந்திட, தனித்த இசைத்தமிழ் துறையினை உருவாக்கி, அதன் வழி தமிழிசையின்  செல்வாக்கை உலகிற்கு உணர்த்த, உயர்த்திட முயல்வோம்.

2 comments: